வீட்டிலிருந்து கல்வி – 3

(முந்தைய பதிவு)


மேற்கொண்டு தொடரும் முன் ஹரிணி முதலாம் வகுப்பு படித்த பள்ளி முதல்வர் சார்ந்து இறுதியாக சில வார்த்தைகள். அவளுடன் படித்த இன்னொரு மாணவனின் குடும்பத்தில் அடுத்த வருடங்களில் பொருளாதார சிக்கல்கள் வலுவாக எழுந்தன. அவனது தந்தை நோயுற்றதன் காரணமாக தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியவில்லை. அவனது அம்மா ஐஸ்வர்யாவின் தோழி. தனியாக நின்று இன்றுவரை குடும்பத்தை தாங்கி வருகிறார். அவருக்கு படிப்பு பெரிதாக இல்லை என்பதால் வீட்டு வேலை, தையல் வேலை என பலவற்றை செய்து குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு மகனையும் தொடர்ந்து அந்தப் பள்ளியில் படிக்க வைத்து வருகிறார். அவனது கல்விக் கட்டணம் மற்ற பள்ளிகளை ஒப்பிட இந்தப் பள்ளியில் குறைவுதான் என்றாலும் அவனது அன்னையால் தனது வருமானத்திலிருந்து அதைக் கட்ட முடியவில்லை. அந்த பள்ளியின் முதல்வரிடம் அதுகுறித்து அவர் கூறியபோது, கணிசமான தொகையை அம்மாணவனுக்கு அவர் தொடர்ந்து தள்ளுபடி செய்து வருகிறார். கொரோனா பொதுமுடக்க காலகட்டத்திலும் அந்த பையனுக்கு கிட்டத்தட்ட முழுக்கவே கல்விக்கட்டணத்தை தள்ளுபடி செய்தார். இதுபோல வேறு சில மாணவர்களுக்கும் அவர் உதவி வருகிறார் என்பதை அச்சமயத்தில் அறிந்தோம். இக்காலத்தில் அப்படி ஒருவர் அதிசயம்தான்.

அச்சிறுவனுக்கு கல்விக் கட்டணம் கட்ட நாங்களும் சிறிது உதவினோம். அப்போது அவனது அன்னையிடம் “அரசுப் பள்ளியில் அவனைச் சேர்த்தால் இந்த கட்டணச் சுமையிலிருந்து சற்று தப்பிக்கலாமே?” என்று ஆலோசனை சொன்னோம். அரசுப் பள்ளிகளில் பல தீய விஷயங்கள் புழங்குவதாகவும், நிச்சயம் தன் மகன் அங்கு சேர்க்கை சரியில்லாமல் கெட்டுப் போவான் என்றும் சொன்னார். ஹரிணியை அரசுப் பள்ளியில் சேர்க்கலாமா என முன்பு யோசித்திருந்தபோதும் இதே காரணங்களைச் சொல்லி – அரசுப் பள்ளியில் ஆசிரியையாக வேலைபார்த்து வந்த – இன்னொரு தோழி அறிவுறுத்தியிருந்தது நினைவுக்கு வந்தது.

ஹரிணியை பள்ளிக்கு அனுப்பாமல் நாங்களே கற்றுக்கொடுக்கும் படலம் ஆரம்பமாகிற்று. அப்போதுதான் கல்வியாண்டு முடிவடைந்திருந்தது என்பதால் நாங்களும் முதல் மாதம் எதுவும் சொல்லிக் கொடுக்கவில்லை. விரிவான திட்டங்களை மாத்திரம் நான் அவ்வப்போது போட்டுக் கொண்டிருந்தேன். ஜூன் மாதத்தில் உறவினர் வீட்டில் ஒரு திருமணம் ஏற்பாடாகியிருந்தது. அது முடிந்த அடுத்த வாரத்தின் திங்கட்கிழமை அன்று பள்ளிகள் மீண்டும் திறப்பதாக சொல்லியிருந்தனர். நாங்கள் அந்த திருமண நிகழ்வுக்கு சென்றுவிட்டு அலட்டிக் கொள்ளாமல் மேலும் சில நாட்கள் கோவையில் தங்கி பொழுதைக் கழித்துவிட்டு சென்னை திரும்பினோம். திருமண நிகழ்விலேயே எங்களுடைய இந்தத் திட்டத்தை அறிய நேர்ந்த சில உறவினர்கள் “ஸ்கூல் திறந்திடுமே? ஊர் திரும்ப வேண்டாமா?” என்று கேட்டார்கள். நாங்களோ இல்லை, இவளது பள்ளி சில நாட்கள் சென்றுதான் திறக்கிறது என்றோ நாங்கள் விடுமுறை விண்ணப்பித்திருக்கிறோம் என்றோ வாய்க்கு வந்ததை சொல்லிக் கொண்டிருந்தோம். உண்மையில் ஆரம்ப நாட்களில் “வீட்டிலிருந்துதான் கற்பிக்கிறோம்” என்று வெளிப்படையாக சொல்ல தைரியம் வரவில்லை. திரும்ப பள்ளியிலேயே சேர்க்க வைக்குமளவுக்கு வாதம் புரிவார்களோ என்ற அச்சம்தான் காரணம்.

ஆனால் சில நாட்களுக்குள்ளேயே சமாளிக்க முடியாமல் வெளிப்படையாக “வீட்டிலிருந்து கற்பிக்கிறோம்” என்பதை சொல்ல வேண்டியதாயிற்று. ஹரிணி அதிதிக்கு முன்னர் நாங்கள் பொய்சொல்வதும் எங்களுக்கு உவப்பாக இல்லை என்பது இன்னொரு காரணம் (மீண்டும் தட் “காந்தியாக இருந்தால் இந்த சூழலில் என்ன பண்ணியிருப்பார்” மொமெண்ட்!). அச்சமயத்தில் நாங்கள் வாங்கியிருந்த அடுக்குமனை குடியிருப்பு வீடு கட்டி முடிக்கப்பட்டு குடியேறத் தயாராக இருந்தது. ஆகவே இருந்த வாடகை வீட்டை காலி செய்துவிட்டு அங்கு குடியேறினோம். அப்போதெல்லாம் நாட்கள் பின்வருமாறு செல்லும்.

காலை எட்டரை மணியளவில் குழந்தைகளை எழுப்புவோம்.

பதினோரு மணியளவில் அலுவலகம் கிளம்பினால் போதுமானது என்ற அலுவலகச் சூழல் அப்போது எனக்கு இருந்தது. ஆகவே அவர்கள் எழுவதற்குள் நான் குளித்து சாப்பிட்டு முடித்து தயாராக இருப்பேன்.

ஒன்பது ஒன்பதரைக்குள் குழந்தைகள் இருவரும் தயாராகி இருப்பார்கள். அதற்குள் அவர்களுக்கு எந்தப் பாடத்தில் எதை நடத்தலாம் என்ற முடிவை எடுத்திருப்போம். தமிழ், கணிதம், சமூக அறிவியல், சமயத்தில் ஆங்கிலம் ஆகியவை என் பொறுப்பு. ஆங்கிலமும் அறிவியலும் அவ்வப்போது சமூக அறிவியலும் ஐஸ்வர்யாவின் பொறுப்பு. அதிலும் சமயத்தில் இயற்பியலை என் வசம் எடுத்துக் கொள்வேன்.

பதினோரு மணியளவில் நான் அலுவலகம் கிளம்பிவிட்டேன் என்றால், குழந்தைகள் இருவரும் அவர்களுக்குப் பிடித்தவற்றில் ஒன்றை செய்து கொண்டிருப்பார்கள். ஓவியம் வரைதல், அச்சிட்ட ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டல், கைவினைப் பொருட்கள் எதையாவது யூட்யூபில் பார்த்து செய்தல், விளையாடுதல் அல்லது சும்மாவேனும் இருத்தல் என அவர்களுக்கு தோன்றும் எதுவானாலும் எங்களுக்கு சம்மதம்.

மதியவுணவுக்குப் பிறகும் ஓய்வுதான். மாலை வேளையில் ஐஸ்வர்யாவின் மேற்பார்வையில் பாடங்கள் தொடரும்.

ஐந்தரையிலிருந்து இருட்டும் வரை – சமயத்தில் இருட்டிய பின்னருமே கூட விளக்கொளியில் – எங்கள் குடியிருப்பில் உள்ள பிற குழந்தைகளுடன் சென்று இருவரும் விளையாடிவிட்டு வருவார்கள். பொதுவாக அக்குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்ய போகும்போது இவர்களும் வீடு திரும்பி விடுவார்கள்.

நான் வீடு திரும்ப எட்டரை மணியளவில் ஆகும். அதன்பின்னர் பொதுவாக ஏதேனும் பேசிக் கொண்டிருப்பது மட்டுமே நடக்கும். அல்லது அவர்கள் விரும்புபவற்றை செய்யட்டும் என்றும் விட்டுவிடுவோம்.

இரவு படுக்கப்போகும்முன் மனநிலை வாய்த்தால் கதைகள் ஏதேனும் சொல்வேன். இல்லையென்றால் உறங்கி விடுவோம்.

இவை தவிர ஐஸ்வர்யாவுக்கு வீட்டு வேலைகளில் உதவுதல், கடைகள், அஞ்சலகம் போன்றவற்றுக்கு அவள் சென்றால் இவர்களையும் அழைத்துச் செல்லுதல் ஆகியவை நடக்கும். வாரயிறுதிகளில் ஊர் சுற்றுதலைத் தவிர அவ்வப்போது கல்வியும் நடக்கும்.

ஆரம்பத்தில் இவர்கள் அதே குடியிருப்பில் உள்ள மற்ற குழந்தைகளுடன் விளையாடுவது குறித்து எனக்கு மிகுந்த தயக்கங்கள் இருந்தன. அக்குழந்தைகள் இவர்களோடு விளையாடுவதில் அவர்களின் பெற்றோர்களுக்கு தயக்கங்கள் இருக்கலாம் என எண்ணியிருந்தேன். இவர்களது பாதிப்பால் அக்குழந்தைகள் பள்ளி செல்ல மாட்டேன் என்று சொல்லலாம் என எண்ணி அவர்கள் தங்கள் குழந்தைகளை இவ்விருவருடனும் விளையாட விடமாட்டார்கள் என அஞ்சியிருந்தேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக அம்மாதிரி எதுவும் நிகழவில்லை. இருவரும் பள்ளி செல்வதில்லை என்பதை அறிந்த பெற்றோர்களில் சிலர் ஆர்வத்துடன் வந்து எங்களிடம் பேசினர். நாங்கள் செய்பவற்றை கேட்டுக் கொண்டனர். ஆனால் தங்களது குழந்தைகள் எங்கள் குழந்தைகளுடன் விளையாட விடுவதிலோ பழக விடுவதிலோ எவ்வித தயக்கங்களையும் அவர்கள் காட்டவில்லை. அவ்வகையில் அவர்களுக்கு நாங்கள் நன்றியுடையவர்களாக இருக்கிறோம்.

பாடங்களை குழந்தைகளுக்கு கற்பிப்பது நான் நினைத்த அளவுக்கு கடினமாகவெல்லாம் இல்லை. உள்ளூர நான் ஒரு ஆசிரியனாக வேண்டியவன் என்ற எண்ணம் எனக்கு உண்டு. அதன் விளைவாலோ என்னவோ, குழந்தைகளுக்கு பாடங்களை கற்பிப்பதில் எப்போதுமே ஆர்வமாக இருப்பேன். மற்ற குழந்தைகள் யாருமில்லாமல் ஒரேயொரு மாணவி மட்டுமே என்ற நிலை வரும்போது கற்பிப்பது எளிதானதாகி விடுகிறது. அவள் கற்றுக் கொள்ளும் வேகத்தை வெகு சீக்கிரமாகவே கணித்து விட முடியும். ஒவ்வொரு பாடத்துக்கும் அதனுள் ஒவ்வொரு தலைப்புக்குமே வெவ்வேறு வேகத்தில் கற்பார்கள் என்பதை மட்டும் நாம் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கும். விரைவாக அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள் என்றால் நாமுமே அத்தலைப்புக்குள் ஆழமாக சென்று கற்பிக்க முடிகிறது. இவை சறுக்கும் பொழுதுகளும் இல்லாமல் இல்லை. சில சமயங்களில் எளிய விஷயங்கள் என நமக்குத் தோன்றுபவற்றை கற்றுக்கொள்ள குழந்தைகள் மிக அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். அச்சமயத்தில் எங்களுக்கு பொறுமை போய்விடும். ஆனால் அவ்விஷயம் அவர்களுக்கு பிடிபட்டவுடன் அது சார்ந்த அடுத்தடுத்த விஷயங்களை வெகு விரைவில் அவர்கள் கற்றுத் தேர்வதையும் கண்டிருக்கிறோம். நாட்பட நாட்பட அவர்கள் எங்களை நல்ல ஆசிரியராக்கினர் என்றே சொல்ல வேண்டும்.

வீட்டிலிருந்து என்பதால், நினைத்த நேரத்தில் நினைத்த பாடத்தை விரும்பும் வேகத்தில் அவர்களால் கற்க முடிந்தது. வார நாட்களில் சும்மா இருப்பதும் நடக்கும், சனி ஞாயிறுகளின் மதியப்பொழுதுகளில் கற்பதும் நடக்கும். இதன் விளைவாக ஹரிணிக்கு ஏழு வயதாக இருக்கும்போதே ஒரு கற்பனை ஸ்டேஷனரி கடையில் விஸ்தாரமான பில் ஒன்றை கணக்கிட்டு மொத்தத் தொகையை சொல்ல முடிந்தது. செஸ் விளையாட்டை வெகு சுலபமாக கற்றுக்கொள்ள முடிந்தது. கேமராவில் நல்ல படங்களை எடுக்க ஆரம்பித்திருந்தாள். தமிழ் மொழியிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தாள். இப்போதுமே கணிதத்தில் நல்ல ஆர்வமுள்ளவள் அவள். அந்த சமயத்தில் வேக வேகமாக கற்பித்த வகையில் அல்ஜீப்ராவை எல்லாம் அவளுக்கு அறிமுகப்படுத்தியிருந்தேன். அதிதிக்கு அப்போது மூன்று வயதுதான் என்பதால், வண்ணம் தீட்டுதல், எண்களையும் ஆங்கில எழுத்துக்களையும் கண்டுபிடித்தல், அவற்றை வெள்ளை போர்டில் மார்க்கரை வைத்து எழுதுதல் போன்றவற்றை செய்ய இயன்றது. அந்த வயதில் பள்ளிக்கு சென்ற பிற குழந்தைகளின் வளர்ச்சியோடு அவ்வப்போது ஒப்பிட்டுப் பார்த்தோம். இவர்கள் கற்றுக்கொண்ட அளவு நிறைவளிப்பதாகவே இருந்தது.

சமூகம் செல்லும் போக்கிலிருந்து சற்றே விலகி நாம் ஏதாவது செய்ய முயன்றாலே மொத்த சமூகமும் முழுவிழிப்பு நிலையை அடைந்து நம்மை கண்காணிக்க ஆரம்பித்துவிடும். இந்த அழகில், நாங்கள் செய்ய ஆரம்பித்திருந்த வீட்டிலிருந்து கல்வி என்பது சுற்றியிருப்போரின் கவனத்தை எளிதாக ஈர்த்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் நம்மைச் சுற்றியுள்ள உறவினர்களில், நண்பர்களில், அலுவலக நண்பர்களில் எத்தனை கல்வியாளர்கள் இருக்கிறார்கள் என்று அறிய நேர்ந்தபோது உண்மையிலேயே ஆச்சரியமாகிப் போனது. இக்கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில் நான் சொன்ன அந்த ரயில் பயணத்திலேயேகூட அது நிகழ்ந்தது. நாங்கள் அமர்ந்திருந்தது எதிரும் புதிருமாக பன்னிரண்டு பேர் அமரக்கூடிய இரண்டாம் வகுப்பு இருக்கைகளில். ஹரிணியை நாங்கள் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலிருந்தே கற்பிக்கிறோம் என்பதை அறிய நேர்ந்த அங்கிருந்த பிற பயணிகள் அனைவருமே அதிர்ச்சியாகி அவரவர்களுக்கு தோன்றிய அறிவுரைகளையெல்லாம் சொல்ல ஆரம்பித்திருந்தனர். முந்தைய வரிசை இருக்கைகளில் இருந்தவர்களெல்லாம் நாங்கள் பேசுவதைக் கேட்டு திரும்பிப் பார்த்து கவனித்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் ஒரு சூட்சுமத்தை கண்டறிந்தேன். நாம் பொதுவாக மற்றவர்கள் நாம் பேசுவதை கேட்கவிரும்புவோமே அன்றி மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை காதுகொடுத்து கேட்பதில்லை. இதன் அடுத்த படியாக, நாம் பேசுவதற்கு அபரிமிதமான விஷயங்கள் இருக்கையில் எதிரிலிருப்பவர் பேசுகிறாரா இல்லையா, அவரது புன்னகையில் நக்கல் இருக்கிறதா இல்லையா என்பது போன்றவையும் நமது கண்களுக்கோ மூளைக்கோ எட்டுவதில்லை.

அவர்களின் கேள்விகளுக்கு ஆரம்பத்தில் பதில் சொல்லிக் கொண்டிருந்த நான், கொஞ்சம் கொஞ்சமாக “ஆமாமா அது கஷ்டம்தான்”, “அதெல்லாம் ஈஸியா சமாளிச்சிடலாம்”, “அந்த மாதிரி கற்பித்தல் முறைகளெல்லாம் இங்கேதான்! அமெரிக்காவுல அதையெல்லாம் விட்டு ஏழு வருஷமாச்சு” என்ற பதில்களை சுழற்சி முறையில் தகுந்த முகக்குறிகளோடு சொல்லிக் கொண்டே வந்தேன். அவை முறையே தாங்கள் சொன்னது ஏற்கப்பட்டது, தாங்கள் சொன்னவற்றை முன்னமே சிந்தித்து அதற்குரியவற்றை செய்துவிட்டான், நாம் அரதப் பழசாகிட்டோம் போல என்ற எண்ணங்களை என்னிடம் வாதிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அந்த பயணிகளில் ஒருவர் வழக்கறிஞர். அவர் மிகுந்த ஊக்கமடைந்து “இப்படித்தான் ஆந்திரா பக்கத்தில் தொலைதூரக் கல்வி முறையில் படித்த சட்டம் சார்ந்த பட்டப்படிப்புகள் செல்லாதுன்னு ஒரே போடா போட்டான் கோர்ட்டில. எக்ஸாம் எழுதினவன், பாஸானவன், வேலைக்கு சேர்ந்தவன் எல்லாரும் காலி” என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டிருந்தார். அது அந்த சமயத்தில் எனக்கு வயிற்றை கலக்கி விட்டது என்பது உண்மைதான். அப்படியே பேச்சுக்கு நடுவில் இணையத்தை கைபேசியில் துழாவி அவர் சொன்ன செய்தியை கண்டடைந்தேன். அதுபோன்ற தொலைதூர பட்டப்படிப்பில் குளறுபடிகள் நடந்திருந்தது தெரிய வந்திருந்ததால் அந்த வருடத்தைய தேர்வுகள் மட்டும் ரத்து செய்யப்பட்டிருந்தன என செய்தி சொன்னது. இவரோ மொத்த பட்டப்படிப்புமே என்றென்றைக்குமாக ரத்தாகி விட்டது என சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஞானோதயம் எழுந்தது. தேவையில்லாமல் மற்றவர்களிடம் இதுகுறித்து வாதம் செய்யக் கூடாது. உண்மையிலேயே அக்கறையுடன் பேசுகிறார்கள் என்ற உணர்வை நம்மிடம் தோற்றுவிப்பவர்களிடம் மாத்திரம் உரையாடிக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

நான் அப்போது வேலைபார்த்த அலுவலகத்தில் ஊழியர்கள் தம் குழந்தைகளை தம்முடன் அலுவலகத்துக்கு அழைத்து வரலாம் என்ற வசதி வழங்கப்பட்டிருந்தது. ஒருநாள் ஐஸ்வர்யா எதற்கோ அதிதியுடன் வெளியில் செல்ல வேண்டியிருந்ததால் ஹரிணியை அழைத்துக் கொண்டு அலுவலகம் சென்றேன். அவளை அங்கு காண நேர்ந்த அலுவலக நண்பர்கள் ஒவ்வொருவருமே “பள்ளி இல்லையா இன்று?” எனக் கேட்க, அனைவரிடமும் தனித்தனியாக வீட்டிலிருந்து கற்பிக்கிறோம் என்பதை சொல்ல நேர்ந்தது. உடன் வேலை பார்த்த நண்பர் ஒருவர் மிகக் கடுமையாக எதிர்வினையாற்றினார். பணி அடிப்படையில் எனக்கு அவர் சீனியர் என்பதால் அதிகம் என்னால் வாதிட முடியவில்லை. மையமாக சிரித்துக் கொண்டு இந்தப் பக்கம் வந்துவிட்டேன்.

இவ்வாறு நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. இந்நிலையில் என் தாய்மாமாக்கள் இருவரும் ஒருமுறை எங்கள் வீட்டுக்கு வருகை தந்தனர். அவர்களும் இந்த வீட்டிலிருந்து கல்வி என்பதை அப்போதுதான் அறிய நேர்ந்தனர். என்ன சொல்வார்களோ என்ற பதட்டம் எனக்கு ஏற்பட்டிருந்தது. ஆனால் நான் எதிர்பார்த்திருந்ததற்கு முற்றிலும் மாறாக, அவர்களிருவமே அதை ஆதரித்தனர்! என் மூத்த மாமாவின் பேத்தியும் பேரனும் அவர்கள் படித்துக் கொண்டிருந்த பள்ளியில் கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்டதால், அவர்களை தற்காலிகமாக பள்ளிக்கு அனுப்பாமல், வீட்டிலிருந்தபடியே தனிவகுப்புகளை ஏற்பாடு செய்து பாடங்களை படிக்க வைத்துக் கொண்டிருந்தனர். அதிலும் அந்த பேத்தி அப்போது பத்தாவது பொதுத் தேர்வை எழுதவிருந்தாள். அச்செய்தி எனக்கே ஆச்சரியமூட்டியது. நாங்கள் எடுத்த முயற்சியை பாராட்டிவிட்டு மாமாக்கள் இருவரும் விடைபெற்று சென்றனர். மறுநாள் காலை என் மூத்த மாமாவின் மாப்பிள்ளை எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். நாங்கள் இவ்வாறு வீட்டிலிருந்தே கற்பிப்பதை பாராட்டி, எங்கள் தைரியத்துக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார். என் பெருமதிப்புக்குரிய அவரிடமிருந்தும், என் தாய்மாமாக்கள் இருவரிடமிருந்தும் வந்த இந்த பாராட்டுக்கள் மிகவும் நெகிழச் செய்தன. கண்களின் நீர் திரள அவருக்கு நன்றி சொல்லி மறுமொழி அனுப்பினேன். மீண்டும் வந்தடைந்த ஊக்கத்துடன் கற்பிப்பதில் ஈடுபட்டோம்.

இடையில் ஒருமுறை மேற்குறிப்பிட்ட அந்த அலுவலக சீனியர் திடீரென ஒரு நாள் பேரார்வத்துடன் வந்து என்னிடம் வீட்டிலிருந்து கல்வி என்பதைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். சில கேள்விகளுக்கு பதில்களை சொல்லிவிட்டு எதற்காக அவற்றை அவர் கேட்கிறார் என கேட்டேன். அப்போது பதினான்கு வயதே ஆகியிருந்த ஒரு சிறுவனை Block chain என்ற தொழில்நுட்பத்தில் அவனடைந்திருந்த திறனுக்காக எங்கள் அலுவலகத்தின் அமெரிக்கக் கிளை அவனை வேலைக்கு எடுத்திருந்தது! அவன் “வீட்டிலிருந்து கல்வி” வழியில் கற்பிக்கப் பட்டவன் எனபது அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம். அதைச் சொல்லிவிட்டு அவர் “ஹரிணிக்கு உடனே நீங்கள் அறிந்துள மென்பொருள் தொழில்நுட்பத்தையெல்லாம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விடுங்கள். இன்னும் ஏழு வருஷம் இருக்கிறது. அவளை தேத்தி இந்த பையனைப் போல கொண்டுவந்து விடலாம்” என்றார். உண்மையில் அவளுக்கு மென்பொருள் சார்ந்த சிலவற்றை அப்போது சொல்லிக் கொடுத்திருந்தேன். அவளது வழக்கப்படி அவளும் அதை ஆர்வமாக கற்றுக்கொண்டிருந்தாள். ஆனால் இப்படி அதிவேகத்தில் அவற்றை அவளிடமோ அதிதியிடமோ திணிப்பதில் எனக்கு சற்றும் ஆர்வமில்லை. ஆகவே அவரது யோசனையை நான் மென்மையாக ஆனால் உறுதியாக அதை மறுத்துவிட்டேன். அவருக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அச்சம்பவத்துக்குப் பின்னர் “வீட்டிலிருந்து கல்வி” என்பதற்கு அவரே ஒரு பிராண்ட் அம்பாஸிடர் ஆகிவிட்டார். இவ்வாறாக “வீட்டிலிருந்து கல்வி” என்பதன் முதல் வருடம் முடிவுக்கு வந்தது.

அந்த ஒரு வருட பொழுதில், நாங்கள் விரும்பிய இடங்களுக்கு விரும்பிய நேரத்தில் சென்றுவர முடிந்தது. ஆரம்பத்திலிருந்த தயக்கங்கள் நீங்கி, வாரநாட்களில் நிகழும் மணநிகழ்வுகள், குடும்ப நிகழ்வுகள் ஆகியவற்றில் முழுமையாகக் கலந்து கொண்டோம். கேட்பவர்களிடமெல்லாம் தைரியமாக “வீட்டில் வைத்துதான் கல்வி அளிக்கிறோம்” என்பதை சொல்லி வந்தோம். எனக்கு அலுவலகத்தில் விடுமுறை கிடைத்து விட்டால் போதுமானது என்பது எங்கள் விருப்பம்போல திட்டமிடுவதில் உதவிகரமாக இருந்தது. அந்த வருடத்தைய நவம்பரில் ஐஸ்வர்யாவின் அத்தை மகனின் நிச்சயதார்த்த விழாவுக்காக மும்பை சென்று ஒரு வார காலம் தங்கியிருந்து சுற்றிப் பார்த்துவிட்டு வந்தோம். இருப்பினும் பெரிய சுற்றுலாக்களுக்கெல்லாம் அந்த காலகட்டத்தில் செல்ல முடியவில்லை. முந்தைய சபரிமலைப் பயண பதிவில் சொன்னதுபோல வீட்டுக்கடன் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்த பொழுதுகள் அவை. ஆனாலும் அந்த சூழலுக்குள் எங்களால் இயன்ற வரையில் கம்பு சுற்றிக் கொண்டிருந்தோம். 2018ம் ஆண்டின் ஜூலை வாக்கில் அலுவலக பணி நிமித்தமாக இரண்டு வருடங்களுக்கு சுவிட்சர்லாந்து செல்லவேண்டி வந்தது. என் அலுவலகக் குழுவில் இருந்த மற்ற நண்பர்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பு கெடும் என்பதால், தாங்கள் மட்டும் தனியாக பயணம் செய்ய, நாங்கள் எந்தவித தடுமாற்றங்களுமின்றி நால்வருமாக சுவிஸ்ஸிற்கு பயணமானோம். சுவிஸ்ஸில் மகள்கள் இருவரின் கல்விப் பயணத்தில் பெரியதொரு திருப்பம் நிகழ்ந்தது. நல்ல விதமாகத்தான்.

(தொடரும்)

One thought on “வீட்டிலிருந்து கல்வி – 3

Leave a comment